Nandi Story - நந்தியின் வரலாறு
நந்தியின் நிறம் வெள்ளை, வெண்மை என்பது தூய்மையைக் குறிப்பது. அறமாகிய தர்மத்தின் நிறமும் வெண்மையே. நந்தி தூய்மையும் தர்மமும் நிறைந்தது.சிவபெருமானின் வாகனமும் கொடியும் ரிஷபமே (காளை). தர்மதேவதை, சிவபெருமானிடம் தன்னை வாகனமாக ஏற்கும்படி கூறினாள். அவ்வேண்டுகோளுக்கு இணங்க சிவபெருமான் - ஒவ்வொரு யுகத்திலும் நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்ற பாதங்களால் நீ நடக்க வேண்டும். நானே உனக்கு உயிராய் இருந்து உன்னை நடத்துவதால், நம்மை வணங்குவோர் செய்யும் பாவங்கள் கூட அறமாக மாறும் என்று வரமருளினார்.
சிவாலயங்களில் உள்ள நந்தி மூன்று கால்களை மடக்கி ஒரு காலை மட்டும் நிமர்த்தி யுள்ளதை நாம் காண முடியும். கலியுகத்தில் ஒரு காலால் நடக்க வேண்டும் என்ற சிவபெருமானின் ஆணைக்கேற்பவே அவ்வாறு உள்ளது.
சிவாலயங்களில் கர்ப்பக் கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுவார். அழிவே இல்லாதது தருமம். அது விடை (ரிஷபம்) வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார்.
Nandhi - நந்தி பற்றிய சில தகவல்கள்
- நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.
- நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனுமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்'' என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.
- பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
- நந்திதேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி ஒன்று, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவிலில் உள்ளது.
- சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பிரமாண்ட அதிகார நந்தி வாகனம் உள்ளது. இந்த அதிகார நந்தியை தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தந்தை பொன்னுசாமி கிராமணி என்பவர் செய்து கொடுத்தார்.
- ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம்.
- தமிழ்நாடு மக்களுக்கு நந்தி என்றதும் தஞ்சை பெரிய கோவில் நந்திதான் நினைவுக்கு வரும். இந்த நந்தி ஒரே கல்லால் ஆனது.
- மதுரை ஆவணி மூல வீதியில் "மாக்காளை'' எனப்படும் சுதையால் அமைக்கப்பட்ட பிரமாண்ட நந்தி உள்ளது. இத்தகைய மாக்காளை நந்திகளை நெல்லை, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடை மருதூர் ஆலயங்களிலும் காணலாம்.
- திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது. இந்த நந்தி முன் தீபம் ஏற்றி வலம் வந்து மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
- திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து பார்த்தால், மலையானது, நந்தி ஒன்று படுத்திருப்பது போன்ற தோற்றத்தில் காட்சித்தரும். அந்த இடத்தை "நந்திமுக தரிசனம்'' என்கிறார்கள்.
- மைசூர் சாமுண்டி மலை மீதுள்ள நந்தி கண்கவர் அழகான நந்தியாகும்.
- கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவ ஆலயம் உள்ளது. அங்கு நான்கு மூலைகளிலும் நந்தி வைக்கப்பட்டுள்ளது.
- திருவாரூர் தியாகராஜர் கோவில் சன்னதியில் ஈசனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி எழுந்து நிற்கும் நிலையில் நந்தி உள்ளது. இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.
- திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக நந்தி திகழ்ந்தார். திருமூலருக்கு நந்தி பெருமான்தான் 9 வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.
- கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி துர்கா மலையே பரவலாக நந்தி மலை என்று அழைக்கப்படுகிறது. நந்தி மலையே பென்னாறு, பாலாறு பொன்னையாறு ஆகிய ஆறுகளில் பிறப்பிடமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் இருக்கின்றது. ஆயிரம் வருடத்து பழமை வாய்ந்த நந்தி கோவிலால் நந்தி மலை என்ற பெயர் ஏற்பட்டது.
- நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.
- நந்தியை வழிபடும்போது, `சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே! சன்னிதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக' என்று பிரார்த்திக்க வேண்டும்.
- நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.
- சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.
Comments
Post a Comment