Thaipusam / தைப்பூசம்
தமிழ்க் கடவுளான முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச நாளாக உலகெங்கும் உள்ள தமிழர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் வரும் முதல் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் சேர்ந்த நாளில் முருகனுக்கு விழா எடுக்கப்படுகிறது. உலகெங்குமுள்ள முருகப் பெருமானின் திருத்தலங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் பூஜைகளும் நடத்தப்படும்.Thaipusam Festival / தைப்பூசத் திருவிழா
வெவ்வேறு இடத்திலுள்ள மக்களால் வெவ்வேறு விதமாக தைப்பூசம் திருவிழாவாக அனுஷ்டிக்கப்படுகின்றது. தைப்பூச நாளைப் பற்றிய சில சுவாரசிய தகவல்கள்:- அன்னை பராசக்தி மற்றும் சிவபெருமானின் மகனான முருகனின் பிறந்தநாளே தைபூசத் திருநாளாக நம்பப்படுகிறது.
- ஆதியும் அந்தமுமான சிவபெருமான், பராசக்தியுடன் சேர்ந்து சிதம்பரத்தில் நடனமாடி தரிசனம் செய்த நாளும் தைப்பூச நாளாகும்.
- சிதம்பரத்திலுள்ள திருக்கோவிலில் திருப்பணிகளைச் செய்து கொண்டிருந்த இரணியவர்மன், சிதம்பர நடராஜரை நேரில் சந்தித்து அருள்பெற்ற நாளும் இந்நாளே.
- மேலும் தைப்பூசத்தன்றுதான் சுவாமி வள்ளலார் அவர்கள் ஒளியாகினர். அவர் ஒளியான வடலூரில் உள்ள மேட்டுக்குப்பம் என்னும் கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு தைப்பூச விழாவைக் கொண்டாடுவர்.
Thaipusam Viratham / தைப்பூச விரதம்
தைப்பூச நாளில் விரதமிருந்து முருகனை தரிசனம் செய்தால் வேண்டியன அனைத்தும் நிறைவேறும்! மேலும் முருகப்பெருமானின் திருவருளைப் பெறலாம். தைப்பூசத்தன்று விரதமிருப்பது எப்படியென்று பார்க்கலாம்:தைப்பூசத்திற்கு முதல்நாள், வீட்டை சுத்தம் செய்து வைக்கவேண்டும். தைப்பூசம் அன்று காலையில் எழுந்து நீராடிவிட்டு முருகனின் படத்திற்கு மலர்மாலை அணிந்து வழிபட வேண்டும். முருகன் அவதரித்த நாள் என்பதால், கோவில்களில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறும். மேலும், அனைத்து கோவில்களிலும் சிறப்பு அன்னதானம் வழங்கப்படும். விரதமிருப்பவர்கள் அன்னதானத்திற்கு காணிக்கையாக பணம் அல்லது அரிசி மற்றும் அன்னதானத்திற்குத் தேவையான பொருட்களும் கொடுப்பர்.
தைப்பூசத்தின் முக்கிய அம்சமாக மக்கள் முருகப்பெருமானை வேண்டி பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் (சர்க்கரை காவடி, தீர்த்தக் காவடி, பறவைக் காவடி, மயில் காவடி, பால் காவடி, மச்சக்காவடி) போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவர்.
Comments
Post a Comment