Thanjavur Big Temple (Brihadeeswarar) History in Tamil – Aanmeegam

Brihadeeswarar Temple History

thanjavur periya kovil

தமிழர்களின் சமயம் சைவ சமயம். ஒரு காலத்தில் உலகம் முழுவதும் சைவ மதத்தின் சிவ வழிபாடு உலகின் அனைத்து நாடுகளிலும் பின்பற்றப்பட்டது. வங்காள விரிகுடாவை தங்களின் ஒரு சிறு ஏரியாக கருதி கடல் கடந்து பல நாடுகளில் ராஜ்ஜியத்தையும், சைவ மதம் மற்றும் வாழ்க்கை முறையை பரப்பியவர்கள் சோழர்கள். அந்த பரம்பரையின் பெருமையை எக்காலத்திற்கும் கூறும் வகையில் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் ஸ்ரீ பிரகதீஸ்வரர் ஆலயம் பற்றிய சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.

1000 ஆண்டுகளைக் கடந்து தமிழினத்தின் பெருமைமிகு அடையாளமாக உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். எத்தனையோ இயற்கைச் சீற்றங்கள், அந்நியர்களின் படையெடுப்புகள். அனைத்தையும் தாங்கி, காலத்தின் சாட்சியாக கம்பீரம் குலையாமல் நிற்கும் தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜனின் 1032-ம் ஆண்டு சதயவிழா 29.10.2017 கொண்டாடப்பட்டது..

சோழர்களின் ராஜ்யத்தை தென்கிழக்காசிய நாடுகளில் உண்டாக்கிய சோழ மன்னர்களின் பரம்பரையில் தோன்றிய ராஜ ராஜ சோழன் சிவபெருமான் மீது தான் கொண்ட அளவு கடந்த பக்தியால் ஒரு ஆலயம் அமைக்க எண்ணம் கொண்டார். அதன் படி இக்கோவில் கட்டுவதாற்கான கற்களை அண்டை மாநிலங்களிலிருந்து கொண்டு வந்தார்.

அக்கற்களை எல்லாம் சரியான அளவில் செதுக்குவதற்கு மட்டும் 25 ஆண்டுகள் கழிந்திருக்கிறது. செதுக்கிய அக்கற்களை சரியான முறையில் அடுக்குவதற்கு 9 ஆண்டுகள் ஆகியுள்ளன. ஆகா மொத்தம் 34 ஆண்டுகள் செலவழித்து இந்த அற்புதமான கோவிலை காட்டியுள்ளார் ராஜ ராஜ சோழன். இந்த கோவிலில் இருக்கும் சிவபெருமானின் லிங்கம் செய்வதற்கான கல் தற்போதைய மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து கொண்டு வந்து வடிக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கத்தின் உயரம் மட்டும் 12 அடி. மூலவர் லிங்கம் மிக பெரிதாக இருக்கும் இந்திய கோவில்களில் தஞ்சை பெரிய கோவில் முதலாவதாகும்.

Brihadeeswarar Temple Architecture

தஞ்சைப் பெரிய கோயில், ஏராளமான அற்புதங்களைத் தன்னுள்ளே பொதிந்துவைத்திருக்கிறது. புவி அச்சின் சாய்வுகளைக் கணித்து, மிக நுட்பமாக அடித்தளத்தை அமைத்து, இருகாற்படை நுட்பத்தில் தொடங்கி, கனமில்லாத ஒற்றைக்கல்லால் கோபுரத்தை வடிவமைத்து நிறுத்தியிருக்கிறார்கள் சோழச் சிற்பிகள். புவியின் சுழற்சிக்கேற்ப தன்னைத்தானே தகவமைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இக்கோயிலின் கட்டுமான நுட்பம் உலக வல்லுநர்களை எல்லாம் விழியுயர்த்தி வியக்கவைக்கிறது.

ஒவ்வொரு கல்லிலும் கலைநயம். ஒவ்வொரு சிற்பத்திலும் ஓராயிரம் கதைகள். வழிபாட்டுக்குரிய ஆலயமாக மட்டும் அல்லாமல், வங்கியாக, கலைக்கூடமாக, சமூக நிர்வாகத்துக்கான ஒருங்குகூடு மையமாக விளங்கியிருக்கிறது இந்தப் பெரிய கோயில். இதை இராஜராஜேச்வரம் என்று குறிப்பிடுகின்றன இங்குள்ள கல்வெட்டுகள். 1,000 ஆண்டு சரித்திரத்தில் தஞ்சையை ஐந்து முறை பூகம்பங்கள் தாக்கியுள்ளன. அனைத்தையும் தாங்கி கனகம்பீரமாக நிற்கிறதென்றால், நுட்பமான கட்டுமானமே காரணம்.

Brihadeeswarar Temple

கல்லணை நீர் தழுவிச்செல்லும் திருச்சுற்று மாளிகை, நெடிதுயர்ந்த திருவாயில்கள், வான் கயிலாயமாகவே விளங்கும் விமானம், இயற்கையின் அத்தனை அம்சங்களையும் அணுக்கமாகச் சுமந்துகொண்டிருக்கும் சிற்பங்கள். என பிரபஞ்சத் தத்துவத்தின் கட்டுமான மொழிபெயர்ப்பாக இருக்கிறது இந்தக் கோயில்.

Thanjavur Temple Kalvettu

சில வருடங்களுக்குத் திருப்பணி செய்தபோது திருச்சுற்று மாளிகையின் அஸ்திவாரத்தில் ஏராளமான முண்டுக்கற்கள் கிடைத்தன. ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொருவரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பொன்னள்ளி கொடுத்தோர் முதல் கல் கொடுத்தோர் வரை எவரின் பெயரும் வரலாற்றில் விட்டுப்போய்விடக் கூடாது என்பதில் ராஜராஜன் காட்டிய அக்கறை வியக்கவைக்கிறது.

இக்கோயிலுக்கு ஏராளமானோர் பங்களிப்புச் செய்திருந்தாலும் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர்கள் 12 பேர். அரசன் ராஜராஜன், தலைமைத் தச்சன் குஞ்சரமல்லன், அவனது உதவியாளர்கள் நித்த வினோதப் பெருந்தச்சன், கண்டராதித்த பெருந்தச்சன். பெரும் கொடை வழங்கிய ராஜராஜனின் சகோதரி குந்தவை, பல்வேறு கட்டுமானப் பணிகளில் பங்கெடுத்துக்கொண்ட ராஜராஜனின் சேனாபதி கிருஷ்ணன் ராமன், நிர்வாக அதிகாரி பெய்கைநாட்டுக் கிழவன் தென்னவன் மூவேந்த வேளாண், ராஜராஜனின் குருமார்கள் ஈசான சிவபண்டிதர், சர்வ சிவ பண்டிதர், மகன் ராஜேந்திரன், கோயிலின் தலைமைக் குரு பவனப்பிடாரன், கல்வெட்டுகளைப் பதிப்பித்த இரவி பாருளுடையான்..!

Who Built Thanjavur Temple?

தஞ்சைப் பெரியகோயிலைக் கட்டியது யார் என்பது பற்றி நெடுங்காலம் சர்ச்சைகள் இருந்தன. தஞ்சையை ஆண்ட கரிகாலன் தீரா நோயால் தவித்ததாகவும், இந்தப் பெரிய கோயிலைக் கட்டி இங்குள்ள சிவகங்கைத் தீர்த்தத்தில் மூழ்கியெழுந்ததால் நோய் தீர்ந்ததென்றும், பிரகதீஸ்வர மகாத்மியம் என்ற நூல் சொல்கிறது. கிருமி கண்ட சோழன் என்ற கரிகாலனின் பட்டப் பெயரை இதற்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டியது அந்த நூல். ஆராய்ச்சியாளர் ஜி.யு.போப், காடுவெட்டிச் சோழன் என்பவனே பெரிய கோயிலைக் கட்டினான் என்று என்று எழுதினார்.

1886-ம் ஆண்டில், ஹீல்ஷ் என்ற ஜெர்மானிய அறிஞர் இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வுசெய்யும் பணியில் இறங்கினார். 6 ஆண்டுகால தீவிர உழைப்பில் கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆராய்ந்த ஹீல்ஷ், பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரம் என்ற வரியை முன்வைத்து, பெரிய கோயிலைக் கட்டியவன் ராஜராஜ சோழனே என்று உறுதிசெய்தார்.

Thanjavur Periya Kovil Vimanam

பெரிய கோயிலின் விமானம் மிகத் திறமையான தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுக்கான் பாறை நிலப்பரப்பில் 350 அடிக்குத் தொட்டி போன்ற பகுதியை உருவாக்கியிருக்கிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்த காட்டாறுகளில் இருந்து மணலைக் கொண்டு அத்தொட்டியில் கொட்டியிருக்கிறார்கள். அதன் மேல் மரக்கால் வடிவில் அடித்தளம் அமைத்து கனமான கல் பொருத்தி தரைமட்டத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

அதுவரை ஒற்றைச் சுவராகக் கொண்டு வந்து தரைக்கு மேலே இரட்டைச் சுவராகக் கொண்டுபோய் கோபுரமாக உயர்த்தியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையின் வடிவத்தில் இருக்கிறது விமானக் கட்டுமானம். இதற்குப் பெயர், டைனமிக் ஆர்க்கிடெக்சர். இதன் சிறப்பு என்னவென்றால், பூமியின் ஆட்டத்துக்கேற்றவாறு கோபுரமும் அசைந்து தன்னைத் தகவமைத்துக்கொள்ளும். அதனால்தான் எல்லா இயற்கைச் சீற்றங்களையும் தாக்குப்பிடித்து நிற்கிறது.

Thanjavur Big Temple Nandi

ராஜராஜன் வாயிலுக்கு எதிரே உள்ள 16 கால்மண்டபத்தில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட மிகப்பெரிய நந்தி உள்ளது. இந்த நந்தி கி.பி. 16-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் காலத்தில் நாயக்க மன்னர்களால் உருவாக்கபட்டதாகும். இந்த மண்டபத்துக்கு தென்புறம் திருச்சுற்று மாளிகையில் வடதிசை நோக்கியவாறு காணப்படும் நந்தியே ராஜராஜன் காலத்தில் கோவிலுக்காக வடிக்கபட்டது. தஞ்சை பெரிய கோவிலில் இருக்கும் நந்தியின் சிலை இந்திய கோவில்களில் இருக்கும் மிகப்பெரிய நந்தி சிலைகளில் ஒன்றாகும்.
Thanjavur Big Temple Nandi

Thanjavur Temple Major Deities

பெரிய கோயிலின் பிரதான நுழைவு வாயிலுக்குக் கிழக்கில் உடையார் சாலை இருக்கிறது. உள்ளே அக்னிதேவர் சந்நிதி இருக்கிறது. இந்த உடையார் சாலையில் 240 சிவயோகியர்கள் தங்கி, ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் 10 பேர் கொண்ட குழுவாகப் பிரிந்து 24 திருவிழாக்களை நடத்தியதாகவும் கல்வெட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கோயிலில்..... உள்ள செப்புத்திருமேனிகள் பற்றிய பல செய்திகள் இந்த உடையார் சாலையில் கல்வெட்டுகளாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூணும் புத்தகங்களைப்போல எழுத்துகளால் நிறைந்திருக்கின்றன.

இங்கிருக்கும் நந்தி மண்டபம், அம்மன் சந்நிதி, வாகன மண்டபங்கள் அனைத்தும் பிற்காலக் கட்டுமானங்கள். விமானத்தை ஒட்டி, கருவறைக்குத் தெற்கேயுள்ள தட்சிணாமூர்த்தியை உருவாக்கியது மராட்டியர்கள். வாராகியும் அண்மைக்கால வருகைதான். மகா மண்டபத்தின் மேற்பகுதியும் பிற்காலக் கட்டுமானம்தான். கோயிலைச் சுற்றியிருக்கும் திருச்சுற்றுமாளிகை, ராஜராஜன் காலமான பிறகு கட்டப்பட்டது.

Brihadeeswarar Temple Facts

முகப்பில் உள்ள ஐந்து தளங்களைக் கொண்ட கேரளாந்தகன் திருவாயிலில் முதல்தளம் தவிர, மற்றவை செங்கற்களால் கட்டப்பட்டவை. இந்தச் செங்கற்கள் சிறப்பான தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை. அடப்பமரம், மாமரம், கடுக்காய் மரம், தாணிக்காய் மரம் ஆகியவற்றின் பட்டைகளையும், திரிபலா எனப்படும் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றையும் கஷாயமாக்கி, மண்ணில் ஊற்றி, ஐந்து மாதங்கள் புளிக்கப் புளிக்கப் பிசைந்து, செங்கலாக அறுத்து, சுட்டு, ஒரு மாதம் ஆறவிட்டு, தண்ணீரில் ஊறவிட்டு, நன்கு உலரச்செய்து அதன் பிறகே கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Thanjavur Temple Shadow

தஞ்சை பெரிய கோவில், பூமியிலிருந்து செங்குத்தாக மேல் நோக்கி உள்ளது. ஒரு டிகிரி கோணம் கூட சற்று சாய்வு கூட இருக்காது. அதாவது சூரிய ஒளி பட்டு, கோபுரத்தின் உச்சி நிழல் கீழே படாதவாறு உள்ளது. கருவறையைச் சுற்றி, நான்கு சுவர்கள். வெளியே சுற்றரை. அதன் வெளியே நான்கு சுவர்கள். இந்த எட்டு சுவர்களையும் இணைத்து, அதன் மேல் கூடையைக் கவிழ்த்து வைத்தாற்போல விமானம் அமைக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து 216 அடி உயரம் கொண்ட இந்தக் கோபுரம் 13 அடுக்குகள் உடையது. நான்கு பட்டை வடிவில், வெற்றிடமாகக் கூம்பிச் செல்லும் இதன் உச்சியில் 12 அடி உயரமுள்ள கலசம் பொருத்தப்பட்டுள்ளது.

மாலிக்குகளும், நவாப்களும், சுல்தான்களும் பலமுறை தஞ்சை பெரிய கோயிலைச் சூறையாடினர். பிரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயரும் பீரங்கிகளைவைத்துத் தகர்த்தனர். 30 ஆண்டுகளுக்கும் மேல் சிப்பாய்களின் கூடாரமாக இருந்த பெரிய கோயில் பல தாக்குதல்களைச் சந்தித்தது. இருந்தும் அதன் கம்பீரத்தை யாராலும் சிதைக்க இயலவில்லை. அதனால்தான் அது இன்றும் பெரிய கோயிலாக இருக்கிறது.

Brihadeeswara Temple Timings


  • Morning: 6:00am to 12:30pm
  • Evening: 4:00am to 8:30pm


Thanjavur Big Temple Address

Membalam Rd, Balaganapathy Nagar,
Thanjavur,
Tamil Nadu – 613007

Comments