Pandurangashtakam - பாண்டுரங்காஷ்டகம்

Pandurangashtakam - பாண்டுரங்காஷ்டகம்

Pandurangashtakam

மஹாயோக பீடே தடே பீமரத்யா :
வரம் புண்டரீகாய தாதும் முனீந்த்ரை:!
ஸமாகத்ய திஷ்டந்த மானந்த கந்தம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம்!!
  • பொருள்: சிறந்த யோக பீடமான பீமா நதிக்கரையில் புண்டரீகனுக்கு வரம் அளிப்பதற்காக முனிவர்களுடன் கூடி நின்று கொண்டிருப்பவரும், ஆனந்தம் என்ற பயிருக்கு ஆதாரமானவரானவரும், அருவமான பரப்பிரமத்துக்கு அடையாளமான உருவத்துடன் விளங்குபவருமான பாண்டுரங்கனை வணங்குகின்றேன்.

தடித்வாஸஸம் நாலமேகாவபாஸம்
ரமாமந்திரம் ஸுந்தரம் சித் ப்ரகாசம்!
வரம் த்விஷ்டகாயாம் ஸமந்யஸ்தபாதம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம்!!
  • பொருள்: மின்னல் போன்று பளிச்சிடும் ஒளியுடைய உடையணிந்தவரும், நீலமேகத்தைப் போன்ற நிறமுடையவரும், லக்ஷ்மியின் இருப்பிடமானவரும், அழகானவரும், மிகச் சிறந்தவரும், செங்கல் மீது சமமாகப் பதிந்திருக்கும் பாதத்தை உடையவரும், மகாபலியிடம் மூவடிகேட்டு உலகளந்தவரின் கால்கள் ஒரு செங்கல்மேலும், அருவமான பரப்பிரம்மத்தின் உருவ அடையாளமாக ஒளிரும் பாண்டுரங்கனை வணங்குகின்றேன்.

ப்ரமாணம் பவாப்தேரிதம் மாமகாநாம்
நிதம்ப:கராப்யாம் த்ருதோ யேந தஸ்மாத்!
விதாதுர்வஸத்யை த்ருதோ நாபிகோச:
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம்!!
  • பொருள்: என்போன்ற சாமான்யர்களுக்காக ஜனன மரணமென்கிற சம்சார சாகரம் என்பது இவ்வளவே என்று கூறுவதுபோல், எவரால் தன் இடைப் பிரதேசம்தன் கைகளால் தாங்கப்படுகிறதோ, பிரம்மாவாசம் செய்வதற்காக தனது தொப்புள்கொடி தாங்கியிருப்பவர் எவரோ அந்த அருவமான பரப்பிரமத்தின் அடையாள உருவமான பாண்டுரங்கனை நான் பூஜிக்கின்றேன். தன்னை நம்பும் பக்தர்களுக்கு சம்சார சாகரம் சிறு குட்டையைப் போன்றதாகிவிடும் என்பதைக் காட்ட இடுப்பளவை சுட்டுவது போன்ற முத்திரை காட்டும் பாண்டுரங்கனை வணங்குகின்றேன்.

ஸ்புரத்கௌஸ்து பாலங்க்ருதம் கண்டதேசே
ஸ்ரீயா ஜுஷ்டகேயூரகம் ஸ்ரீநிவாஸம்!
சிவம் சாந்த மீட்யம் வரம் லோக பாலம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம்!!
  • பொருள்: கழுத்துப் பிரதேசத்தில் கௌஸ்துப மணியால் அலங்கரிக்கப்பட்டவரும், ஸ்ரீதேவியால் அணிவிக்கப்பட்ட தோள்வளையினை உடையவரும், ஸ்ரீதேவிக்கு இருப்பிடமானவரும், சிவஸ்வரூபியும், சாந்த வடிவினரும், புகழத்தக்கவரும், மிகச் சிறந்தவரும், உலக ரட்சகரும், அந்த அருவமான பரப்பிரம்மத்தின் உருவ அடியாளமாக விளங்குபவருமாகிய பாண்டுரங்கனை வணங்குகின்றேன்.

சரச்சந்த்ரபிம்பாநநம் சாருஹாஸம்
லஸத்ருண்டலாக்ராந்த கண்டஸ்தலாந்தம்!
ஜபா ராகபிம்பாதரம் கஞ்ஜநேத்ரம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம்!!
  • பொருள்: சரத்கால சந்திரனின் உருவைப்போன்ற ஒளியுடையவர், புன்னகை தவழும் முகத்தினை உடையவர், ஒளிரும் குண்டலங்களால் இடிபடும் கன்னப் பிரதேசத்தை உடையவர், செம்பருத்தியைப் போன்ற சிவந்த இதழ்களையுடையவர், செந்தாமரைக் கண்ணன் என்கிற உருவமற்ற பரம்பொருளின் உருவ அடையாளமாகத் திகழும் பாண்டுரங்கணை துதிக்கின்றேன்.

கிரீடோஜ்வலத்ஸர்வதிக் ப்ராந்தபாகம்
ஸுரைரர்சிதம் திவ்யரத்னை:அநர்கை:!
த்ரிபங்காக்ருதிம் பர்ஹமால்யாவதம்ஸம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம்!!
  • பொருள்: எல்லா திசைகளிலும் ஒளிரும் கிரீடத்தை அணிந்தவர், மதிப்பிடமுடியாத சிறந்த ரத்தினங்களைக் கொண்டவர், மூன்று வளைவாக நளின எழிலுடன் உடலை வளைத்து நிற்பவர், மயிலிறகு மாலையை அணிந்தவர், அருவமான பரப்பிரம்மத்தின் உருவ அடையாளமாக விளங்கும் பாண்டுரங்கனை வணங்குகின்றேன்.

விபும் வேணுநாதம் சரந்தம் துரந்தம்
ஸ்வயம் லீலயா கோப வேஷம் ததாநம்!
கவாம் ப்ருந்தகானந்ததம் சாருஹாஸம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம்!!
  • பொருள்: எங்கும் வியாபித்திருப்பவர், குழலிசைப்பவர், முடிவற்றவர், விளையாட்டாகவே இடையர் வேடம் பூண்டவர், மாடு கன்றுகளை மேய்த்தவர், புன்னகையால் மிளிர்பவர், நீக்கமற பிரபஞ்சவெளியில் வியாபித்தவராக பரபிரம்மத்தின் உருவ அடையாளமாகத் திகழும் பாண்டுரங்கனை வணங்குகின்றேன்.

அஜம் ருக்மிணீ ப்ராண ஸஞ்ஜீவனம் தம்
பரம் தாம கைவல்ய மேகம் துரீயம்!
ப்ரஸன்னம் ப்ரபந்நார்திஹம் தேவதேவம்
பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம்!!
  • பொருள்: பிறப்பற்றவர், ருக்மணியின் உயிரைத் தழைக்கச் செய்பவர், பரமபத நிலையானவர், விழிப்பு, கனவு, உறக்கம் என்ற மூன்றுக்கும் அப்பாற்ப்பட்ட ஆத்மாநுபூதியான நான்காவது நிலையில் இருக்கும் ஒரே ஒருவர், அருட்பொலிவானவர், அடியார்களின் துயரை அழிப்பவர், தேவாதி தேவர், அருவமான பரப் பிரம்மத்தின் உருவ அடையாளமாக இருப்பவரான பாண்டுரங்கனை வணங்குகின்றேன்.

ஸ்தவம் பாண்டுரங்கஸ்ய வை புண்யதம் யே
படந்த்யேகசித்தேந பக்த்யா ச நித்யம்!
பவாம்போநிதிம் தேவி தீர்த்வாந்தகாலே
ஹரேராலயம் சாச்வதம் ப்ராப்னுவந்தி!!
  • பொருள்: புண்ணியத்தைக் கொடுக்கும் பாண்டுரங்கன் மீதான இந்த துதியை மனம் ஒன்றி தினமும் படிக்கும் எனக்கு, சகல சௌபாக்யமும் பெற்று, ஆரோக்கியமாய் வாழ்ந்து முடிவில் ஜனன மரணமாகிய இந்த சம்சார கடலைக் கடந்து, ஹரியின் ஆலயமான வைகுண்டத்தை நிலையான இருப்பிடமாக கொள்ள அருள்புரிவாய் பாண்டுரங்கா.

இயற்றியவர்: ஆதிசங்கரர்

Comments